வங்கி கணக்கு குளறுபடிகள் சரிசெய்யப்பட்ட பிறகு, மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் (ஜெகதீஸ்வரி) ராஜபாளையத்தில் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலப்புலி பஜாரில், தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
"இந்தப் பகுதியில் பெண்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற டாஸ்மாக் கடைகளும் விரைவில் மூடப்படும். விடியல் பயணம் இலவச பேருந்து திட்டம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், ஒரு பயனாளிக்குச் செல்ல வேண்டிய தொகை தவறுதலாக மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்குச் செல்வதாகப் புகார்கள் வந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பக் குளறுபடிகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பிறகு, உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும். இனி முழுமையான தொகை உரிய பயனாளிகளுக்குச் சென்று சேரும்.
தாய்மாமன் சீராக 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பட்டுப்புடவை வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வில் 8 கிராம் தங்கம் வழங்குவது மக்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். மேலும், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

