மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி பொறையார் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில், ரமேஷ் (45) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த ராஜமூர்த்தி (22) என்பவர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், பொறையார் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, ராஜமூர்த்தியை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இதேபோல், கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி சீர்காழி காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சீர்காழி பிடாரி வடக்கு வீதியைச் சேர்ந்த அழகு (40) என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இந்நிலையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், ராஜமூர்த்தியையும், அமுதாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேர், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 29 பேர், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 11 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 22 பேர், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேர் என மொத்தம் 73 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
குற்றவாளிகள் மீது பாயும் குண்டர் சட்டம் - 73 பேர் சிறை!
🕒 31 அக்., 2026, 03:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •மயிலாடுதுறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது. நடப்பாண்டில் இதுவரை 73 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
