திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை சுகாதாரத்துறையினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிரிசமுத்திரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பவித்ரா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அவர்கள் பரிசோதித்தபோது, அது பெண் குழந்தை என்பது தெரியவந்துள்ளது. மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத தம்பதியினர், கருவைக் கலைக்க இடைத்தரகர்களை நாடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கீதா மற்றும் இந்திராணி ஆகியோர் கருக்கலைப்பு செய்வதற்காக கிரிசமுத்திரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதுகுறித்த ரகசிய தகவல் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் சிவலிங்கத்திற்கு கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த சுகாதாரத்துறையினர், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற கீதா மற்றும் இந்திராணி ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கைதான இரண்டு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சட்டவிரோத கருக்கலைப்புக்கு உதவிய இடைத்தரகர்கள் மற்றும் பாலினத்தை கண்டறிய உதவிய நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது முறையாகப் பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

