திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத் திருவிழா புதன்கிழமை விமரிசையாகத் தொடங்கியது. தொடர்ந்து 9 நாள்கள் நடைபெறவுள்ள இத்திருவிழா வரும் நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் தொடக்க நாளான புதன்கிழமை மாலை, ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பின், இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில், உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய நம்பெருமானுக்கு இருபுறமும் வெண்சாமரம் வீசப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வரும் நவம்பர் 4-ஆம் தேதி (8-ஆம் நாள்) மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் நம்பெருமாள், மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்வார். அங்கு இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் திரும்புவார். நிறைவு நாளான நவம்பர் 5-ஆம் தேதி (9-ஆம் நாள்) காலை 9.45 மணிக்கு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
ஊஞ்சல் உற்சவ நாள்களை முன்னிட்டு இரவு 8.00 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



