திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வெளிமாநில வியாபாரி நடத்தி வரும் ஆடை விற்பனைக் கடையில் புகுந்து மிரட்டல் விடுத்ததுடன், ஊழியர்களை உள்ளே வைத்து ஷட்டர் பூட்டப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் புர்கான் (42). இவர் வாழ்வாதாரத்திற்காகத் தமிழகத்திற்கு வந்து, வாணியம்பாடி வாரச் சந்தை சாலையில் கடந்த 14 ஆம் தேதி 'வாணியம்பாடி சூரத் கசானா' என்ற பெயரில் பெண்களுக்கான ஆடை விற்பனைக் கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார். மலிவான விலையில் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், நேற்று மதியம் கடைக்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடை நடத்துவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
பின்னர், புர்கானை கரூர் வைஸ்யா வங்கி அருகில் அழைத்துச் சென்று, கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், மீறினால் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதாகவும், பொய் புகார் அளித்து முடக்கிவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை புர்கான் கடையில் இல்லாத நேரத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது துணி எடுக்க வந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதுடன், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கிவிட்டு, அவர்களைக் கடையின் உள்ளேயே வைத்து ஷட்டரை இழுத்து மூடிவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், ஊழியர்கள் பின்பக்க வழியாக வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.
வணிகப் போட்டி மற்றும் வெளிமாநிலத்தவர் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இக்கும்பல் அச்சுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள பாதிக்கப்பட்ட வியாபாரி புர்கான், தன் உயிருக்கும் குடும்பத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மலிவான விலையில் வியாபாரம் செய்ததால் வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கடையில் பூட்டிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

