Settings

முகப்பு/நகரங்கள்/வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை ஊழலற்றதாக மாற்றுவதே அரசின் நோக்கம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
நகரங்கள்

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை ஊழலற்றதாக மாற்றுவதே அரசின் நோக்கம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

🕒 1 நவ., 2026, 02:38 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை ஊழலற்றதாக மாற்றுவதே அரசின் நோக்கம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைகளை ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த சேவைத் துறைகளாக மாற்றுவதே அரசின் முதன்மை நோக்கம் என அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைகளை ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த சேவைத் துறைகளாக மாற்றுவதே மாநில அரசின் முதன்மை நோக்கம் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர் மற்றும் துணை வணிகவரி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வணிகவரித்துறையில் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளதாகப் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று குறிப்பிட்ட அவர், எந்தக் காலத்திலும் இந்த அரசு ஆட்குறைப்பில் ஈடுபடாது என்றார். மாறாக, தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், பல புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் இயங்குவது குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். சில முக்கிய இடங்களில் உள்ள 100 அலுவலகங்கள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த நிலையில், சார்பதிவாளர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வரும் நவம்பர் 2 முதல் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆட்சிக் காலத்து ஊழல் புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த காலத்தில் அத்துறைகளின் நிலை எவ்வாறு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், ஊழல் குறித்த ஆவணங்கள் தயாராக இருப்பதாகவும், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் அவை பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் எளிதாகச் சேவைகளைப் பெறும் வகையில் ஆன்லைன் முன்பதிவு வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வீடியோ மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 40,000 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். முதல் விற்பனை ஆவணங்கள் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உரிமைப் பொறுப்பு ஆவணம் (MoD) மற்றும் குடும்ப சொத்துப் பங்கீட்டு சான்றுகள் உள்ளிட்டவையும் இணையவழி சேவைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி மக்கள் சேவைகளைப் பெற முடியும் என்றார்.

ஜி.எஸ்.டி அமலுக்குப் பிறகு மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி முறையான வழியில் வந்து கொண்டிருப்பதாகவும், நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு சிறு, குறு தொழிலாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔