திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட ஏனைய பணியாளர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து, ஊதியம் கிடைக்காத நூறுநாள் பணியாளர்கள் வாணியம்பாடி - குடியாத்தம் சாலையில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மற்றும் உமராபாத் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக ஊதியம் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

