திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவாங்கலம் கிராமத்தில், தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையில் ஈடுபட முயன்ற முகமூடி அணிந்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேவாங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி சீதா ஆகியோர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மக் கும்பல் ஒன்று, நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பின்னர், பிரபாகரன் மற்றும் அவரது மனைதியைக் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் தம்பதியினர் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து காரில் தப்பியோடியது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமியப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,கட்டிப்போடப்பட்டிருந்த தம்பதியினரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


