அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சீரான முறையில் தொடர்ந்து குடிநீர் வழங்குவதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட முக்கியப் பணிகள்:
- அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை.
- குடிநீர் விநியோகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள் மீதான நடவடிக்கைகள்.
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்குவது மற்றும் குளோரினேசன் செய்தல்.
- புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகள் மற்றும் அரசுக் கட்டடங்களுக்கான மின் இணைப்புப் பணிகள்.
- டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள்.
குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்யவும், மின் விநியோகப் புகார்களுக்குத் உடனடியாகத் தீர்வு காணவும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செந்தில் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

