Settings

முகப்பு/நகரங்கள்/அமைச்சர் விழாவில் மேயருக்கு அழைப்பு இல்லையா? திமுக கவுன்சிலர் கடும் வாக்குவாதம்!
நகரங்கள்

அமைச்சர் விழாவில் மேயருக்கு அழைப்பு இல்லையா? திமுக கவுன்சிலர் கடும் வாக்குவாதம்!

🕒 2 நவ., 2026, 06:46 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
அமைச்சர் விழாவில் மேயருக்கு அழைப்பு இல்லையா? திமுக கவுன்சிலர் கடும் வாக்குவாதம்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •சேலத்தில் அமைச்சர் கலந்துகொண்ட பள்ளி கட்டட திறப்பு விழாவில், மேயருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 43-வது வார்டுக்கு உட்பட்ட திருச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இன்று திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, அப்பகுதி திமுக மாமன்ற உறுப்பினர் குணசேகரன் பள்ளி வளாகத்திற்கு வந்தார். அங்கு மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் மற்றும் அதிகாரிகளிடம், மேயர் இந்த நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகாரிகள் மேயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், அதனை ஏற்க மறுத்த கவுன்சிலர் குணசேகரன், மேயர் அழைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் பொய் கூறுவதாகவும் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, பள்ளியைத் திறந்து வைக்க வருகை தந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடமும் மாமன்ற உறுப்பினர் குணசேகரன் இதே புகாரை முன்வைத்தார். மேயரை முறையாக அழைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்வதாகக் கூறி அமைச்சரிடமும் அவர் வாக்குவாதம் செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் சக கட்சியினர் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். எனினும், வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், தான் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி குணசேகரன் பாதியில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்வின் போது மாமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாமன்ற உறுப்பினர் குணசேகரன் கூறுகையில், "இந்தக் கட்டடம் கட்டவும், பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திமுக அரசும், மாநகராட்சி மேயரும், மண்டலத் தலைவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், இதற்காகப் போராடிய எங்களை அழைக்காமல் மாநகராட்சி ஆணையாளர் அலட்சியப்படுத்துகிறார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔