தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தி, அதற்கான ரூ.10 கட்டணத்தை எம்.ஆர்.பி. விலையுடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
திருவாரூர் நகரப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை அடுத்து, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மனமகிழ் மன்றத்தில் மதுப்பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரித்ததால் கடையின் உரிமையாளர் கடையை மூடியதுடன், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரினார். இதனையடுத்து, கடையின் நுழைவு வாயிலில் காத்திருந்த மதுப்பிரியர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது அங்கு நின்றிருந்த மதுப்பிரியர் ஒருவர், காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நாங்கள் 10 பேர் சேர்ந்து உட்கார்ந்து போராட்டம் நடத்துவோம்; இரவு நேரத்தில் மது குடிக்கவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது" என்று அவர் கூறிய காணொளி மற்றும் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர், காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

