செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மாயமான சிறுமி ஹேமாவதியின் 22 நாட்களாகியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் தங்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகச் சிறுமியின் தாயார் பவானி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "குழந்தை காணாமல் போன நாள் முதல் இன்று வரை நாங்கள் கூறுவதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் சமூக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் மற்றவர்களிடம் பேசவே எங்களுக்குப் பயமாகவும் மன உளைச்சலாகவும் உள்ளது" என்றார்.
மேலும், "குழந்தை காணாமல் போய் இன்றுடன் 22 நாட்கள் ஆகின்றன. அனைவரின் முயற்சியால் எனது குழந்தை மீட்கப்பட்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே போதும், வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்" என்று அவர் கண் கலங்கியபடி கோரிக்கை விடுத்தார்.

