சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களிடையே பட்டாசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் சேலம் மெஜஸ்டிக் இணைந்து தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளன.
சேலம் அம்மாபேட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர் பரவசு தேவன் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சேலம் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவகுமார் கலந்துகொண்டு, பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்கும் முறைகள் மற்றும் எதிர்பாராத தீ விபத்துகளை எதிர்கொண்டு கையாள்வது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஷ், லயன்ஸ் கிளப் ஆப் சேலம் மெஜஸ்டிக் இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அன்புக்கரசு, ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளியின் முதல்வர் லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ் கிளப் ஆஃப் சேலம் மெஜஸ்டிக் ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் பீட்டர், சரவணகுமார், கோபி, சீனிவாசன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து செய்திருந்தனர்.

