விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகைக் காலத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் சுட்டிக்காட்டியும், விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகை, கீழையூர், திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர். இதில் மாவட்டச் செயலாளர் சிவக்குரு.பாண்டியன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் பாஸ்கர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரபோஜி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் குணாநிதி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

