திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவர், வடகாத்திப்பட்டி மின்சார அலுவலகத்தில் தற்காலிக மின்வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கீழ்முருங்கை பகுதியில் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பத்தைச் சீரமைக்கும் பணியில் சாமுவேல் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் ஸ்டே கம்பியை இழுக்க முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சாமுவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்றும் கூறி சாமுவேலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மின்கம்பத்தைச் சரிசெய்ய முயன்றபோது தற்காலிக மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

