திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், சாலைகள் மற்றும் பொது இடங்களில் அமைந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை வரும் நவம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கடந்த ஜனவரி 27-ம் தேதியிட்ட உத்தரவின் அடிப்படையில், பொது இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கெடுவுக்குள் கொடிக்கம்பங்களை அகற்றத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் மூலம் அவை அகற்றப்படுவதோடு, அதற்கான செலவினங்களும் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டா நிலங்களில் கொடிக்கம்பங்களை நிறுவ விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி உரிய முன் அனுமதி பெற்ற பின்னரே அவற்றை நிறுவ வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

