நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையராக கே. பிரியா ஐ.ஏ.எஸ். அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிறகு தனக்குக் கிடைத்துள்ள முதல் பணியிடமான திருநெல்வேலியில் பொறுப்பேற்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நெல்லை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய மோனிகாராணா தென்காசி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, புதிய ஆணையராக கே. பிரியா நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவைகளையும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியாற்றுவதே தனது முதன்மையான நோக்கம் என்று குறிப்பிட்டார்.
மேலும், முந்தைய ஆணையரிடம் பேசி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்துக் கேட்டறிந்துள்ளதாகவும், அவற்றை அடிப்படையாக வைத்து மாநகராட்சியின் பணிகளை இன்னும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வேன் என்றும் அவர் கூறினார். திருநெல்வேலியை மேலும் மேம்படுத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

