புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவை முன்னிட்டு, கலைஞர் கருணாநிதி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வருகையின் பாதுகாப்பு காரணங்களால் இந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டு, பின்னர் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திறப்பு விழாவில் பங்கேற்கவரும் தமிழ்நாடு முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக, அன்று நடைபெறவிருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வு நவம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியானது.
மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் அரசு நிகழ்ச்சிகளுக்காகத் தேர்வுகளை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள தவாக தலைவர் வேல்முருகன், இது குறித்து காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது:
"முதலமைச்சர் வருகைக்காக மாணவர்களின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமா? மாணவர்களின் எதிர்காலத்தை விட, முதலமைச்சரின் வருகை முக்கியமானதா? புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவிருந்த தேர்வுகள், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பல மாதங்களாக வகுப்பறைகளில் படித்து, தேர்வுக்காகத் திட்டமிட்டு தயாராகி வந்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை, ஒரு அரசு நிகழ்ச்சிக்காகத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாணவர்களின் கல்வி தொடர்பான முடிவுகள் வாய்மொழி உத்தரவுகளால் நடத்தப்படுமா? தேர்வுகளை ஒத்திவைக்க அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்பட்டதா? என்பது குறித்து கல்லூரி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளும் உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அரசு விழாக்களுக்காக மாணவர்களின் கல்வியைப் பாழடிக்கும் நிலை உருவாகக் கூடாது எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





