விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் தொடர் மழை காரணமாக மண் சுவர் ஊறி ஓட்டு வீடு இடிந்து விழுந்த விபத்தில், நான்கு வயது சிறுவன் பலத்த காயமடைந்தார்.
பள்ளப்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக, அஜித்குமார் மற்றும் அனுசியா தம்பதிக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் மண் சுவர் பலவீனமடைந்திருந்தது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக வீடு இடிந்து விழுந்ததில், அவர்களது நான்கு வயது மகன் வெற்றிக்காளை என்பவரின் தலையில் ஓடுகள் விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உடனே மீட்கப்பட்ட சிறுவன், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருச்சுழி வட்டாட்சியர் சோணையன் தலைமையிலான வருவாய்த்துறையினர் உடனடியாக விபத்து நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவில் உரிய அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.


