செய்திகள்
அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்
🕒 1 நவ., 2026, 11:27 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் ஊராட்சியில் நடைபெற்ற
கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையை தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் - பல்லுயிர் மேலாண்மைக் குழு, இழிவு தரும் சாதிப் பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இலுப்பையூர் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் தேவைகள் உள்ளிட்டவை குறித்து இக்கிராம சபையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் தேவைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும். பருவகால காய்ச்சல் மற்றும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் மருத்துவரின் பரிந்துரையின்றி தாங்களாவே மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. தற்போது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதால் அவற்றை தடுத்திடும் வகையில் மருத்துவர்களிடம் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தற்சமயம் அரசு அலுவலர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நமது மாவட்டத்தில் 97 சதவீதம் 14-16 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும், அதிக உப்புத் தன்மை உள்ள பகுதியை கண்டறிந்து அங்கு சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதேபோல் பொய்யாதநல்லூர் கிராமத்தில் 4 சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை முறையாக பயன்படுத்தி பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தைகளையும் பட்டப்படிப்பு வரை பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவதை தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் பொய்யாதநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் கழிப்பறை அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கழிவறை கட்டி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கப்படவுள்ளது. அதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு, எடை, உயரம் அளவு பரிசோதனை மற்றும் பாடங்கள் கற்றுத்தரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் சுயதொழில் செய்வதற்காக வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக பயன்படுத்தி சுயதொழில் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மழைநீர் வடிகால்களை முறையாக அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.க.ரா.மல்லிகா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.த.செந்தில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
