அரியலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்களில் பெண்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், ஆட்சியரகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அக்டோபர் மாதம் 'PINK OCTOBER' சிறப்பு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 3 மற்றும் 4-வது வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கவும், 30 வயதுக்கு மேற்பட்ட அரசு அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு வார காலத்திற்கு இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்ட ஆட்சியரகப் பெண் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, சுய மார்பக பரிசோதனை செய்யும் முறைகள் மற்றும் நோய் அறிகுறிகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுய பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் அறிகுறிகள் கண்டறியப்பட்ட பெண்களுக்கு, 'மேமோகிராம்' (Mammogram) உயர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், இந்த மருத்துவ முகாம்களைப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம்கணேஷ் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

