தாவேகா அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் வேலூரில் 500-க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கம்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் சீர்கெட்டு வரும் சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து வேலூரில் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்திமுக மகளிர் அணியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் தவித்து வருவதைச் சுட்டிக்காட்டியும் மகளிர் அணியினர் கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.
இதில் அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கிருஷ்ணகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்ட மகளிர் அணியினரின் இந்த போராட்டத்தால் அண்ணா சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


