திருநெல்வேலி மாவட்டம், வழுக்கோடை பகுதியில் அரசுப் பேருந்தில் பெண்களை ஏற்ற மறுத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மண்டலப் பொது மேலாளர் செல்வம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த தென்காசி பணிமனைப் பேருந்து, கடையம் மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் இருந்து கடையம் நோக்கிச் சென்ற இப்பேருந்து, வழுக்கோடை பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்ற மறுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இரவுப் பணி முடித்துத் திரும்பும் பெண்கள் வீடு சேருவதில் இதனால் காலதாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே, இதுகுறித்துத் தகவலறிந்த பெண் ஒருவரின் கணவர், முக்கூடல் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, 'பேருந்தில் எத்தனை பேரை ஏற்ற முடியும்' எனக் கேட்டு ஓட்டுநர் சங்கர கிருஷ்ணனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திப் பேருந்தை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த தகவலின் அடிப்படையில், பெண்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த புகாரில் ஓட்டுநர் சங்கர கிருஷ்ணனைப் பணியிடை நீக்கம் செய்து மண்டலப் பொது மேலாளர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.



