மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மம்பட்டிபட்டி கிராமத்தில் உள்ள பொது ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மம்பட்டிபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் உள்ள ஊரணி, கிணறு, விநாயகர் கோவில், பள்ளி, கிராமச் சாவடி, மந்தையம்மன் கோவில் மற்றும் மயானம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 20, 2026 அன்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறி, கிராம மக்கள் இன்று உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார், கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை அகற்ற விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பிறகு கிராம மக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தீவிரப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.









