நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி பிரேமாவதி, தனது சொந்த மகன்களே தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவரது கணவர் ருத்திராபதி ஏற்கனவே காலமான நிலையில், இவருக்கு செந்தில்குமார், உதயக்குமார் என்ற இரண்டு மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். தனது மகன்களுக்குத் தேவையான பண மற்றும் பொருளுதவிகளைத் தன்னால் இயன்ற அளவிற்கு வழங்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தனது வீட்டை மகள் மீனாட்சி பெயருக்கு மாற்றியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன்களும் அவர்களின் மனைவிகளும் தன்னைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும், கொடுமைப்படுத்தி வருவதாகவும் மூதாட்டி பிரேமாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமாவதி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். தன் பெயரில் உள்ள வீட்டை மீட்டுத் தருவதுடன், மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
83 வயதில் பெற்ற மகன்களிடமே பாதுகாப்பு கோரி மூதாட்டி ஆட்சியரிடம் தஞ்சமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.









