திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற காரின் மேற்கூரை மீது குரங்கு ஒன்று சாவகாசமாக அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற அந்த கார், அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்தபோது, அதன் மேற்கூரை மீது சிறிய குரங்கு ஒன்று எந்தவித அச்சமுமின்றி அமர்ந்திருந்ததை சக வாகன ஓட்டிகள் கண்டு வியப்படைந்தனர். பின்னால் கனரக வாகனங்கள் வந்து கொண்டிருந்த நிலையிலும், அந்த குரங்கு ஆபத்தை உணராமல் தொடர்ந்து பயணித்துள்ளது.
இதற்கிடையே, சுங்கச்சாவடியில் இருந்த மற்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் காரைப் பார்த்ததைக் கவனித்த கார் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்திப் பார்த்தபோதுதான் காரின் மேல் குரங்கு அமர்ந்திருப்பது தெரியவந்தது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

