திருப்பூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக முத்துக்குமரன் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய அவர், தற்போது திருப்பூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய மனிஷ் நாரணவரே, தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, புதிய ஆட்சியராக முத்துக்குமரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்தின் பல்வேறு துறை அலுவலர்களும் அதிகாரிகளும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் கூறியதாவது:
- திருப்பூர் மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
- வரும் ஒரு மாதத்திற்குள் மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் வழிநடத்தப்படும்.
- திருப்பூர் மாவட்டத்திற்கு தொழிற்துறையின் வளர்ச்சி எந்தளவுக்குத் தேவையோ, அதேபோல் குடிநீரும் விவசாயமும் அவசியமானவை. எந்த ஒரு துறையையும் பாதிக்காமல், நவீன தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்துத் துறைகளும் சமமாக வளர நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருப்பூர் ஏற்கனவே அமைதியான மாவட்டமாகும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து, உரிய காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
- மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் சரியான கணக்கெடுப்புப் பணிகள் பிப்ரவரி மாதத்தில் வீடு வீடாகச் சென்று முறையாக மேற்கொள்ளப்படும்.
- பொதுமக்களின் ஒத்துழைப்போடும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடும் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

