தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிருப்தியடைந்த பேருந்து ஓட்டுநர் நள்ளிரவில் நடுரோட்டில் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் துரிதமாகச் செயல்பட்டு, ஓட்டுநரை எச்சரித்து பேருந்தை இயக்கச் செய்த காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் தனியார் சொகுசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவிலிலிருந்து நெல்லை வழியாக சென்னைக்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, பேருந்தின் ஓட்டுநர் திடீரென வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
பயணிகள் காரணம் கேட்டபோது ஓட்டுநர் முறையான பதில் அளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் விமலன் மற்றும் டவுன் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நள்ளிரவில் பேருந்தை நிறுத்தியதற்கான காரணத்தை ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
அப்போது ஓட்டுநர், கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் உரிமையாளர் வண்டியை நிறுத்தச் சொன்னதாகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார். மேலும், அமைச்சரிடமோ அல்லது உரிமையாளரிடமோ பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட காவல் ஆய்வாளர் விமலன், ஓட்டுநரை கடுமையாக எச்சரித்தார். யார் உத்தரவிட்டிருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்றும், உடனடியாக வண்டியை எடுத்துக்கொண்டு சென்னையை நோக்கிச் சென்று பயணிகளைப் பாதுகாப்பாக இறக்கிவிடுமாறும் அவர் உத்தரவிட்டார். கட்டணப் பிரச்சினை குறித்துப் பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளரின் உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து, வேறு வழியின்றி ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்த தங்களைப் பாதுகாப்பாக மீட்டு, பயணத்தைத் தொடரச் செய்த காவல் ஆய்வாளர் விமலன் மற்றும் காவல்துறையினருக்குப் பயணிகள் தங்களது நன்றியையும் பாராட்டுிகளையும் தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


