ரஷ்யாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான செஸ் போட்டிகளிலும், அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கங்களை வென்று சாதனை படைத்த திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாஷினிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி - சுகுணா தம்பதியினரின் மகளான யாஷினி, ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். செஸ் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இவர், மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற 27-வது ஆசிய அளவிலான இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும், அசாமில் நடைபெற்ற 14-வது தேசிய செஸ் போட்டியிலும் யாஷினி பங்கேற்றார். இத்தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவர், இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டிகளில் வெற்றி பெற்று சொந்த மாவட்டத்திற்குத் திரும்பிய இளம் செஸ் வீராங்கனை WCM யாஷினிக்கு, திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகில் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வானவேடிக்கைகள் முழங்க, மேளதாளங்கள் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இந்த வரவேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, யாஷினியை ஊக்குவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் தரப்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டதுடன், 15 அடி நீளமுள்ள மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். பின்னர், திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். திருப்பதி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு இளம் வயதில் சர்வதேச அளவில் சாதனை படைத்த யாஷினிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.




