வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கீழ்கொத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தண்டையன்கொட்டாய் கிராமத்தில் ரூ.58.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 சிறு பாலங்களை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
டி.வி.எஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் ரூ.58,68,884 மதிப்பீட்டில் இந்த நான்கு சிறு பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திறப்பு விழா தண்டையன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி பாலங்களை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின்போது, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கல்வியியல் ஆலோசகர் பழனிச்சாமி (ஓய்வு பெற்ற இ.ஆ.ப.), மூத்த இயக்குநர் டி.சேகர் (ஓய்வு பெற்ற இ.வ.ப.), அணைக்கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், வேலூர் வனச்சரக அலுவலர் தரணி, ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், மீனா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் தண்டையன்கொட்டாய் கிராம மக்களின் நீண்ட நாள் போக்குவரத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

