திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், முன்னால் சென்ற அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சேதமடைந்த தனது வாகனத்தைச் சரிசெய்து தரக்கோரி, பேருந்தின் முன் வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி தகராறில் ஈடுபட்ட வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷ் (24). இவர் இன்று காலை ஆம்பூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் உணவு வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பெங்களூர் - சென்னை சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றதால், பின்பக்கம் வந்த ராஜேஷின் இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாகப் பேருந்தின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ராஜேஷின் இருசக்கர வாகனம் சேதமடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அரசுப் பேருந்தை மேற்கொண்டு செல்லவிடாமல் நடுரோட்டிலேயே பேருந்துக்கு முன் தனது வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சேதமடைந்த தனது வாகனத்தைச் சரிசெய்து தரும்படி அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அரசுப் பேருந்து நடுவழியில் நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் நகரக் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து அவர் தகராறில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரையும் அவரது இருசக்கர வாகனத்தையும் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

