திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் கல்லால் தாக்கிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அணுமுத்து. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அருகில் கிடந்த கற்களைக் கொண்டு அணுமுத்துவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர், அணுமுத்துவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

