மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கண்மாயில், விவசாயிகளின் பெயரில் போலி அனுமதி பெற்று வண்டல் மண் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களைப் பயன்படுத்தி இந்த மண் கொள்ளை நடைபெறுவதாகவும், இது தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செயலைத் தட்டிக் கேட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பெண் தொழிலாளர்களை, வாகனங்களை ஏற்றிக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள், வாகனங்களைச் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

