ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதுடன், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
காவேரிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் தனியார் கேஸ் ஏஜென்சி இயங்கி வருகிறது. நேற்று மாலை சுமார் 8:30 மணியளவில், இந்த அலுவலகத்தில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து உருவானது. தீ அலுவலகம் முழுவதும் வேகமாகப் பரவியதில், அங்கு வைக்கப்பட்டிருந்த புதிய கேஸ் பெட்டிகள், 3,000 ரெகுலேட்டர்கள் மற்றும் 2 கணினிகள் ஆகியவை முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
மேலும், அலுவலகத்தையொட்டியுள்ள குடோனில் 10 எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. தீ விபத்தின் தீவிரத்தால் அவற்றில் 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பீதியும் பரவியது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரணமாக, குடோனில் இருந்த மற்ற 8 சிலிண்டர்கள் வெடிக்காமல் பாதுகாப்பாக மீட்கப்பட்டன; இதனால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









