கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் ஒரு பகுதியாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு கடைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள 9 கடைகள் மற்றும் ஒரு குடியிருப்புக் கட்டிடத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அப்போது, ஒரு குடியிருப்பு மற்றும் 8 கடைகளின் உரிமையாளர்கள் தாங்கள் கோவில் நிர்வாகத்திடம் வாடகைதாரர்களாகத் தொடரச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கரூர் காதப்பாறை பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஒரு கடைக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.









