.திருப்பத்தூர் நகர் தர்மராஜா கோவில் தெரு பகுதியில் வசிக்கும் ஒருவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் அந்தப் பசு ஆண் கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்தது. தாயும் சேயுமாக ஒன்றையொன்று பிரியாமல் பாசத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், அந்த உரிமையாளர் கன்றுக்குட்டியை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
இதையடுத்து, கன்றுக்குட்டியை வாங்கியவர்கள் அதனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது, தனது கன்றுக்குட்டி தன்னைவிட்டுப் பிரிந்து செல்வதை உணர்ந்த தாய்ப்பசு, அதனைப் பிரிய மனமின்றி அந்த இருசக்கர வாகனத்தின் பின்னாலேயே வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தனது கன்றுக்குட்டியைப் பின்தொடர்ந்து ஓடிய தாய்ப்பசுவின் தவிப்பு, அங்கிருந்தோரை கண் கலங்கச் செய்தது. தன் பிள்ளையைப் பிரிந்து தவிக்கும் ஒரு தாயின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், வாயில்லாத அந்த ஜீவனின் பாசப் போராட்டம் அப்பகுதி மக்களை உருகச் செய்தது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.









