திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 77-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்வும், வரதட்சணை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசித்த அதிகாரிகள், அதன் அடிப்படை விழுமியங்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பேணிக்காப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, வரதட்சணை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பதை வலியுறுத்தும் வகையில், வரதட்சணை ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பின் மாண்புகளைப் பாதுகாப்பதோடு, சமூகத்தில் நிலவும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.









