திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவும் இதமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பல்வேறு அரிய வகை மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அந்த வகையில், தற்போது தாண்டிக்குடி - பண்ணைக்காடு பிரதான மலைச்சாலையோரத்தில், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் 'ஓடை குறிஞ்சி' மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
இந்த அரிய வகை மலர்கள் பொதுவாக ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை பூத்து குலுங்கும் தன்மை கொண்டவை. தற்போது இந்த மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
மூணாறு மற்றும் ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கிய நிலையில், தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியிலும் இவை பூத்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









