திண்டுக்கல்: சர்வதேச கடல் பகுதியில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே இரண்டு சரக்குக் கப்பல்களுடன் மாயமான திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞரை மீட்டுத் தரக்கோரி, அவரது பெற்றோர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழலில், பொலிவியா நாட்டு கொடியுடன் எஃகு பொருட்களை ஏற்றிச் சென்ற 'பிரிட்ஜ் 1' மற்றும் 'பிரிட்ஜ் 2' ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் கடந்த மே 9, 2026 அன்று ஈரானின் கிஷ் தீவு அருகே மாயமாகின. ரேடார் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் குறித்து எந்தவிதமான அவசர உதவி அழைப்புகளும் வெளியாகவில்லை.
இந்தக் கப்பல்களில் திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் - பாண்டிச்செல்வி தம்பதியின் மகன் நவீன் குமார் (23) உள்ளிட்ட 6 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். சென்னையில் ஜி.பி. ரேட்டிங் மரைன் படிப்பை முடித்த நவீன் குமார், குடும்ப வறுமையை நீக்க ரூ.15 லட்சம் கடன் பெற்று மும்பையைச் சேர்ந்த தனியார் முகமை மூலம் கப்பல் பணிக்குச் சென்றார். கடந்த 2025 நவம்பர் மாதம் துபாயில் பணியில் சேர்ந்த அவர், ஒரு வாரத்திலேயே ஈரானுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கப்பல்கள் மாயமானதைத் தொடர்ந்து, கடந்த 9 மாதங்களாக நவீன் குமார் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை என அவரது தாய் பாண்டிச்செல்வி வேதனையுடன் தெரிவித்தார்.
மகனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில், கல்விக்காக வாங்கிய கடன் நெருக்கடியும் குடும்பத்தை வாட்டி வதைக்கிறது. எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, சர்வதேச கடல்சார் அமைப்புகள் வாயிலாக மாயமான மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.








