திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திருவையாறு, கும்பகோணம், சமயபுரம், புதுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகர மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வருவதற்குப் போக்குவரத்து வசதி எளிதாக உள்ளது.
எனினும், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து நேரடியாகச் செல்லும் வகையில் பேருந்து வசதி இல்லை. இதனால், மருத்துவ சிகிச்சைக்காகத் தஞ்சை செல்லும் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பல பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளின்போது இந்தப் போக்குவரத்துச் சிரமம் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பூதலூர், ஆலக்குடி, வல்லம் வழியாகத் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டால், திருக்காட்டுப்பள்ளி மற்றும் இடைப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளும் பெரிதும் பயனடைவர்.
பொதுமக்களின் இந்த நீண்டகாலச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.









