திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில் நிலையத்தில் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
பழநி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த இரு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலம், ரூபாஹி பகுதியைச் சேர்ந்த இஜாஜுல் ஹக் (21) மற்றும் அமீர் உசேன் (19) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு தட்கல் ரயில் டிக்கெட்டுகள், பூர்த்தி செய்யப்படாத இரண்டு முன்பதிவு விண்ணப்பங்கள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் நீண்ட நாட்களாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பயணிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








