தேனி: தேனியில் உரிய அரசு அனுமதியுடன் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வரும் பெண் மீது, காவல்துறையினர் பழிவாங்கும் நோக்கில் பொய்யான விபச்சார வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் பேட்டி அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா தேவி. இவர் பெரியகுளம் தென்கரை பவளம் தியேட்டர் எதிரே, உரிய அரசு அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் உத்தரவுகளுடன் கடந்த சில ஆண்டுகளாக 'பெஸ்ட் ஆயுர்வேதிக் ஸ்பா' என்ற மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது குடும்ப நண்பரான தாரிக் என்பவர் அப்பகுதியில் இரவு நேர டீக்கடை நடத்தி வந்துள்ளார். அவரிடம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சாந்த் உள்ளிட்ட காவல்துறையினர் தொடர்ந்து மாமூல் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.
கூடுதல் மாமூல் தர தாரிக் மறுத்ததால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது நண்பரான அர்ச்சனா தேவியின் ஸ்பா மையத்தைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி இரவு, பெண் காவலர்கள் இன்றி ஸ்பா மையத்திற்குள் அத்துமீறி நுழைந்த காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சாந்த், தாமே கொண்டு வந்த தடயங்களை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, விபச்சாரம் நடப்பதாகப் பொய் வழக்குப் பதிவு செய்ததாக அர்ச்சனா தேவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கறிஞரைக் கூட அனுமதிக்காமல் தம்மைத் துன்புறுத்தியதாகவும், ஸ்பா மையத்தில் இருந்த ரூ. 50,000 ரொக்கம் மற்றும் செல்போன்களைக் காவல்துறையினர் எடுத்துச் சென்றதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவர், தம்மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.









