திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 31 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக 3 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
முத்துப்பேட்டை அடுத்த மங்களூர் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் இருந்த இரண்டு வெள்ளை சாக்கு மூட்டைகளில் சுமார் 31 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த நான்கு சக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்புப் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் ஹலீல் ரகுமான் (39), ஆலங்காடு யானைக்குளம் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் கங்காதரன் (52), மற்றும் ஜாம்புவானோடை கமாலத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (26) என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மூன்று பேரையும் கைது செய்ததோடு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று செல்போன்கள் மற்றும் 31 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









