தமிழ்நாடு அரசால் உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றும் வகையில் சிறப்பான வீரதீரச் செயல்களைப் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பாராட்டி, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “அண்ணா பதக்கம் – வீரதீரச் செயல்களுக்கான விருது” வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2027ஆம் ஆண்டிற்கான அண்ணா பதக்கம் பெறுவதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க வீரதீரச் செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அதற்கான உரிய ஆதாரங்களுடன் கூடிய பரிந்துரைகள், ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்தனியாக, அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் தெளிவாகத் தயாரிக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 08.12.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விருதிற்குத் தகுதியுடையவர்கள் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 07.12.2026 ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி – 628 101 என்ற முகவரியை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.









