திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில், பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா என முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநிலத் துணைத்தலைவர் பாரி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மணி, வாணியம்பாடி வனச்சரக வனவர் தயாநிதி, சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் ஜென்னி ஜெகநாதன், பூமி அறக்கட்டளை நிறுவனர் ஞானசூரிய பகவான் மற்றும் சங்கத்தின் வழக்கறிஞர் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய அவர்கள், "நமது மாவட்டத்தில் பாலாறு அதிக தூரம் பயணிப்பதால், பாலாற்றின் நடுவில் வளரும் தேவையற்ற செடிகளை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும். மேலும், அந்தச் செடிகளை கரையோரங்களில் நட்டு கரைகளைப் பலப்படுத்த வேண்டும். நடப்பாண்டில் மழை அளவு குறைந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீரைத் தீவிரமாகச் சேகரிக்க வேண்டும். பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் விவசாயிகள் உறுதுணையாக நின்று விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்" என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த விழாவில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மொத்தம் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மல்லகுண்டா சாலையில் உள்ள மதுபானக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், பழுதடைந்த புத்துக்கோவில் - மல்லகுண்டா சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், மற்றும் பெத்தகல்லுபள்ளி பகுதியில் உள்ள ஏரியை தூர்வாரி கரையைப் பலப்படுத்தி நீர்த்தேக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பெத்தகல்லுப்பள்ளி ஏரிக்கரையில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிக்கர்ணப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், அரசுத்துறை அலுவலர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். முடிவில், சங்கச் செயற்பாட்டாளர் தினகரன் நன்றி கூறினார்.









