திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் மீது தெருநாய்கள் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வேடசந்தூர் அருகே உள்ள கைத்தேன்கோட்டை மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. காய்கறி வியாபாரியான இவர், வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள மார்க்கெட்டில் வியாபாரத்துக்காகக் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையில் குறுக்கே ஓடிவந்த தெருநாய்கள் மீது வாகனம் மோதாமல் தவிர்க்க முயன்றபோது நிலைதடுமாறி கிருஷ்ணவேணி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெருகிவரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









