திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவின் பாதுகாப்புப் பணிகளுக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில், மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கியிருந்தனர். தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காவலர்கள் நேற்று மாலை முதல் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர். இந்நிலையில், சென்னை ஆவடி 13-ம் அணி சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வடிவழகன், பள்ளியில் உள்ள கழிவறைக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கழிவறைக் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அதனை உடைத்து உள்ளே சென்ற சக காவலர்கள், அவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காவலர் வடிவழகனின் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் உடல்நலக் குறைவால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









