விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளராகப் பணியாற்றி வந்தவர் பி.கே. பச்சையப்பன் (72). இவர் பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் பரதன்தாங்கல் கிராமத்திலிருந்து செஞ்சிக்கு வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான விஜயகுமார் உள்ளிட்ட திமுகவினர் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மறைந்த பச்சையப்பனின் இல்லத்திற்கு நேரில் சென்ற திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் க. பொன்முடி, கனிமொழி கருணாநிதி எம்.பி., மற்றும் எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி. உள்ளிட்டோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறைந்த செஞ்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.கே. பச்சையப்பனின் 11-வது நாள் நினைவஞ்சலி மற்றும் திருவுருவப் படம் திறப்பு விழா பரதன்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துகொண்டு பச்சையப்பனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கேமல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தீபநாதன், முத்தம்மாள் சேகர், செஞ்சி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நெடுஞ்செழியன், தொமுச நிர்வாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் சந்திரசேகரன், விஜயன், சந்துரு, கலியுக கண்ணன், ஆளவந்தார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.









