தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்துப் போராடி வந்த 'மக்கள் அதிகாரம்' அமைப்பின் மாவட்டச் செயலாளர் தேவா, மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மானோஜிப்பட்டி உப்பரிகை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவா (46). ஆட்டோ ஓட்டுநரான இவர், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தனது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தட்டிக்கேட்டதற்காக, தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும், தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த தேவா திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, அவரை வழிமறித்த கும்பல் ஒன்று ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. மேலும், அவர் ஓட்டி வந்த ஆட்டோவையும் அடித்துச் சேதப்படுத்தினர். படுகாயமடைந்த தேவா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்துறையினர், லியோ (27), முருகேசன் (37), பாரதி (43), மருதுபாண்டியன் (33) மற்றும் சத்தியராஜ் (29) ஆகிய 5 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சட்டவிரோதச் செயல்களை எதிர்த்தவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









