நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, காவேரி ஆற்றங்கரையோரம் நடவு செய்வதற்காக 1,500 பனை விதைகள் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தளிர்விடும் பாரதம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில், தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் சேகரிப்பு மையத்திலிருந்து திரட்டப்பட்ட 1,500 பனை விதைகள், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பணியாளர் சோமசுந்தரத்திடம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின்போது தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின் செயலாளர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
பெறப்பட்ட இந்த பனை விதைகள், குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தின் சார்பில், காவேரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் விரைவில் நடவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் ரவிச்சந்திரன், சிவசரவணன், மகிழினி மற்றும் தளிர்விடும் பாரதம் அமைப்பின் சம்ரிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.









